புங்குடுதீவின் புவிச்சரிதவியல்


யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள புங்குடுதீவு, ஏழு முக்கிய தீவுகளுள் ஒன்றாகும். நயினாதீவு, வேலணை, நெடுந்தீவு போன்றவற்றின் மத்தியில் மையமாக அமைந்துள்ள இத்தீவு, முழுவதும் கடலால் சூழப்பட்ட ஓர் இயற்கை அழகும் புவியியல் முக்கியத்துவமும் வாய்ந்த இடமாக விளங்குகிறது.

புங்குடுதீவிற்கு யாழ்ப்பாணம் வழியாக பண்ணை பாலம், மடத்தீவு சந்தி, அல்லைப்பிட்டி, அராலி சந்தி, வேலணை ஆகிய இடங்களை கடந்து செல்ல முடியும். இலங்கையில் உள்ள தீவுகளுள் சாலைவழியாக போக்குவரத்திற்கான வசதியுள்ள மிகப்பெரிய தீவுகளில் இதுவும் ஒன்றாகும்.

சுமார் 6 மைல் நீளமும் 5 மைல் அகலமும் கொண்ட புங்குடுதீவு, சதுர வடிவத்துடன் ஒத்த தோற்றம் கொண்டதாக இருந்தாலும், கேரதீவின் நீர்தடையால் “ப” எழுத்து வடிவத்தைப் போல தோன்றுகிறது. தெற்குப் பகுதி உயரமாகவும், வட பகுதி தாழ்வாகவும் காணப்படுகிறது.


நில அமைப்பும் விவசாய சூழலும்

தீவின் பல பகுதிகளில் மண்ணின் தன்மை மாறுபடுகின்றது. மடத்துவெளி மற்றும் ஊரதீவுப் பகுதிகளில் பரந்த வெண்மணல் காணப்படுகின்றது. வல்லன் மற்றும் வீராமலை பகுதிகளில் கருநிறக் களிமண் அதிகம் காணப்படுவதால் விவசாயத்துக்கு ஏற்ற நிலங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக நெல், மிளகாய், வெங்காயம், புகையிலை போன்ற பயிர்கள் இங்கே அதிக அளவில் செய்கைப்படுகின்றன.

மேல்நிலங்களில் சோளம், குரக்கன், உழுந்து போன்ற சிறுதானியங்களும் பழங்காலத்தில் அதிகம் பயிரிடப்பட்டுள்ளன. பனைத்தென்னை மரங்கள், வேம்பு, பூவரசு போன்ற மரவகைகளும், கடற்கரை ஓரங்களில் அவாரை, கற்றாளை போன்ற மூலிகைகள் காணப்படுகின்றன.


நீர் வளமும் காலநிலை

தீவின் பெரும்பாலான பகுதிகளில் உவர்நீர் கொண்ட கிணறுகள் காணப்படுகின்றன. சராசரி வெப்பநிலை 80°F மற்றும் வருடாந்த மழைவீழ்ச்சி 50 இஞ்ச்களுக்கு குறைவாகவே உள்ளது. இது மண்ணின் உற்பத்தித்திறனை பாதித்தாலும், ஓரளவுக்கு வேளாண்மையைத் தாங்கக்கூடிய சூழலை வழங்குகிறது. நன்னீர் வளங்கள் சில இடங்களில் மட்டுமே காணப்படுவதால், குடிநீர் என்பது இங்குள்ள மக்களின் முக்கிய தேவைகளில் ஒன்றாகும்.


வரலாற்றுப் பின்னணி

புங்குடுதீவு, யாழ்ப்பாண வரலாற்றின் ஒரு முக்கிய அங்கமாகவும், தென்னிந்தியாவின் கலாசாரமும் பண்டைய கடல் வர்த்தகமும் தீவின் வளர்ச்சியில் பங்கு வகித்துள்ளதாகவும் கருதப்படுகிறது. புளியடித்துறை அருகே காணப்படும் பெருக்குமரங்கள், அராபிய வர்த்தகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை எனக் கூறப்படுகிறது.

முன்னர் இத்தீவு “பியாங்குதீவு” என அறியப்பட்டது. பியாங்கு செடிகளின் பரவலால் அந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் பியாங்கு → பியாங்குதீவு → புங்குடுதீவு என பெயர் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இதனுடன், தென்னிந்தியாவின் "புங்கநூர்" என்ற இடப்பெயருக்கும் இத்தீவிற்கும் தொடர்பு இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஐரோப்பிய ஆட்சிக் காலத்தில், போர்த்துகீசியர் இந்த தீவினை "கொங்கரடிவா" என்றும், ஒல்லாந்தர்கள் "மிடில்பேர்க்" என்றும் அழைத்தனர். தீவுகளின் மத்தியில் இருப்பதால் "மிடில்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

புதியது பழையவை